
பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை கடத்தப்போவதாக ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இன்சமாம் கத்ரி என்ற பெயரில் பேஸ்புக்கில் வெளியான தகவலில், மோடியின் தாயாரை நாங்கள் கடத்தினால், நாங்கள் கூறும் அத்தனையையும் நரேந்திர மோடி செய்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஃபேஸ்புக்கில் வெளியான இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்த தகவல் வெளியானவுடன் இது குறித்து குஜராத் மாநில காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காந்திநகரில் வசித்து வரும் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டன.
இருப்பினும், ஃபேஸ்புக் கருத்து குறித்து பதிலளிக்க குஜராத் மாநில காவலர்கள் மறுத்து விட்டனர். மேலும், அந்த கருத்தை ஃபேஸ்புக்கில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. இதையடுத்து, குஜராத் மாநில காவல்துறையினரும், உத்தர பிரதேச காவல்துறையினரும் இது தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளனர். மாநில உளவு பிரிவு மற்றும் உள்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.





