செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கன்னியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வெங்கடேசன்(30), இவரது மனைவி அனிதா(28), இருவருக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசன் சென்ட்ரிங் கார்பெண்டராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், வெங்கடேசன் நேற்று மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் மனைவி அனிதா உணவு சமைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் வாக்குவாதம் முற்றியது. வாக்குவாதம் மாலை வரை நீடித்த நிலையில் சுமார் 4:00 மணியளவில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது மனைவி அனிதாவின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதில் அனிதா ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.
பின்னர் வெங்கடேசன் அருகே இருந்தவர்கள் உதவியுடன் மனைவியை திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த வெங்கடேசனை தேடிவந்த நிலையில் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு சமைக்கவில்லை என்பதால் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.