பாலஸ்தீன – காஸா மீது நடத்தப்படும் தாக்குதலை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (04.11) இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”சுதந்திர பாலஸ்தீனத்தை அழிக்காதே, அமெரிக்க, இஸ்ரேல் போர் – ஆக்கிரமிப்பு யுத்தம் வேண்டாம், பாலஸ்தீன குழந்தைகளை கொல்ல வேண்டாம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துப் பொருட்களை உடன் அனுப்பு,
அமெரிக்க ஆயுத வியாபாரிகளுக்கு பலஸ்தீன குழந்தைகள் தான் பரிசோதனைக் களமா?” என எழுத்தப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பு யுத்தம் போன்று பலஸ்தீனத்தில் அரபு மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனவழிப்பு யுத்தத்தை மேற் கொண்டுள்ளது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அமெரிக்கா தனது ஆயுதப் பரிசோதனைக் களமாக இந்த யுத்தத்தை பயன்படுத்தக் கூடாது. இந்த யுத்தத்தை உடன் நிறுத்த உலக நாடுகளும், ஐ.நாவும் கவனம் செலுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இதில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.