
இலங்கையை சேர்ந்தவர் தயாரித்த படத்தை சென்னையில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. திரையரங்குகளுக்கு மிரட்டல் வந்ததால் திரையிடவில்லை. இந்த படம் ‘வித்யூ வித் அவுட் யூ’ என்ற பெயரில் தயாராகியுள்ளது.
இலங்கையை சேர்ந்த பிரசன்ன வித்தானகே என்ற இயக்குனர் தயாரித்து இருந்தார். இது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்றது. சிங்கள ராணுவத்தில் பணியாற்றி விட்டு அதில் இருந்து வெளியேறிய ஒருவர் தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணத்துக்கு பிறகு அப்பெண்ணுக்கு தன் கணவன் ராணுவத்தில் இருந்தது தெரியவருகிறது. அத்துடன் தமிழ் பெண்களை பலாத்காரம் செய்து கொன்றவர்களுக்கு கணவன் உதவிகள் செய்ததையும் அவள் அறிகிறாள். இதனால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்கிறாள் என்பதே படத்தின் கதை.
தமிழில் இந்த படத்தை மொழி பெயர்த்து ராயப்பேட்டை அமைந்தகரையில் உள்ள 2 மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டனர். ஆனால் இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. சென்னையில் திரையிடக்கூடாது என தமிழ் அமைப்புகள் வற்புறுத்தின.
திரையரங்குகளில் முற்றுகைப் போராட்டம் நடத்தவும் முயன்றன. இதையடுத்து இரு திரையரங்குகளிலும் இலங்கை படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. இது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் கூறும்போது, சில தமிழ் அமைப்புகள் போராட்டம் மற்றும் மிரட்டல் காரணமாக சென்னையில் படத்தை திரையிடுவதை நிறுத்தி வைத்துள்ளோம் என்றார்.
இதற்கிடையில் படத்தின் இணைதயாரிப்பாளர் ராகுல்ராய் முதல் – அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘வித்யூ வித் அவுட் யூ’ படத்தை சென்னையில் 20–ந்தேதி முதல் திரையிட திட்டமிட்டு இருந்தோம். தியேட்டர் நிர்வாகத்துக்கு மிரட்டல் போன்கள் வந்ததால் படத்தை நிறுத்தியுள்ளோம்.
இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமை மற்றும் அநீதிகள் குறித்து விளக்ககூடியவாக்கு மூலமாகவே இப்படத்தின் கதை அமைந்துள்ளது. எனவே படத்தை வெளியிட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.





