சிறுமியை பணயக்கைதியாக வைத்து காதலியை கடத்திய இளைஞன்!!

531

ஹொரணையில்..

ஹொரணை – கொனாபொல எட்டபஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்து காதலியை கடத்திய இளைஞன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

சிறுமியை கடத்தி சென்று கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி கோபத்தில் பிரிந்திருக்கும் காதலியை கடத்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உறவினர் வீட்டில் விட்டுச் சென்ற நிலையில் பிணைக் கைதியான சிறுமி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் சிறுமியின் தந்தையின் சகோதரியை சுமார் 10 வருடங்களாக காதலித்ததாகவும்,

அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்தமையினால் காதலி இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த உறவை நிறுத்தியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் காலை 6.20 மணியளவில் கொனாபொல எட்டபஹேன வீட்டிற்கருகில் காரில் வேறொரு நபருடன் வந்த சந்தேக நபர் காரில் இருந்து இறங்கி வீட்டை உடைத்து உள்ளே புகுந்து 7 வயது சிறுமியை கடத்தி விட்டு காரில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி தனது பாதுகாப்பில் இருப்பதாக குழந்தைக்கு நம்ப வைக்க, சந்தேகநபர், கொழும்பில் வேலைக்குச் செல்லும் காதலிக்கு வட்ஸ்அப் மூலம் புகைப்படம் ஒன்றை அனுப்பி, திரும்பி வரவில்லை என்றால் சிறுமியை கொன்றுவிடுவதாக மிரட்டி காதலியையும் கடத்தியுள்ளார்.

சிறுமியையும் யுவதியையும் கடத்த சந்தேகநபர் பயன்படுத்திய கார் பத்தேகம பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது குறித்த பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் என்பது தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய சிறுமியையும் காதலியான யுவதியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.காரை வைத்து சந்தேக நபரையும் அவரது நண்பரையும் கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.