நான் அழகாக இல்லை என உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

625

கர்நாடகாவில்..

தான் அழகாக இல்லை என்றும், தன்னுடைய உடல் அதிகளவில் பருமனாக இருக்கிறது என்றும் மன அழுத்தத்தில், மருத்துவ கல்லூரி மாணவி பிரக்ருதி, உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, கல்லூரி விடுதியின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டார். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தட்சிண கன்னடா மாவட்டம் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவக் கல்லூரி எனும் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், பிரக்ருதி ஷெட்டி (20) என்ற மாணவி, கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தபடியே மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் மாணவி பிரக்ருதி ஷெட்டி திடீரென கல்லூரி விடுதியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டார்.

6 வது மாடியில் இருந்து குதித்ததில், மாணவி பிரக்ருதி தலை சிதறி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவி பிரக்ருதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரக்ருதி ஷெட்டி தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது தற்கொலைக்கான காரணம் குறித்து பிரக்ருதி ஷெட்டி எழுதிய கடிதம் போலீசாரிடம் கிடைத்தது. அந்த கடிதத்தில், தனது உடல் மிகவும் பருமனாக உள்ளது என்றும், உடல் எடையைக் குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தனது கடுமையான பயிற்சிகளினாலும் எதுவும் பலன் அளிக்காமல், அடிக்கடி உடல்நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. தான் அழகாக இல்லை எனும் கவலை அதிகரித்து, விரக்தி காரணமாக தற்கொலை முடிவை தேடிக் கொள்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று கடிதத்தில் எழுதி இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமன் பிரச்சினையால் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.