மனைவியே ஆள்வைத்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கொடுமை!!

641

ராஜபாளையத்தில்..

ராஜபாளையத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பமாக, மனைவியே தனது ஆண் நண்பர் மூலம் திட்டமிட்டு படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 12-ம் தேதி தீபாவளியன்று, குடும்பத்துடன் டூவீலரில் வெளியேவந்த பேக்கரி உரிமையாளர் சிவக்குமார் (வயது 42) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் சிவக்குமார் கொலை செய்யப்பட்டதாக அவரின் மனைவி காளீஸ்வரி அளித்த சாட்சியத்தின்படி, ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்திவந்தனர்.

இந்நிலையில், போலீஸாரின் தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, சிவகுமாரின் மனைவி காளீஸ்வரியே தனது ஆண் நண்பருடன் இணைந்து இந்தக் கொலையை அரங்கேற்றியிருப்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “ராஜபாளையத்தை சேர்ந்த சிவக்குமார், பழைய பேருந்து நிலையம் எதிரே பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

முதல் மனைவியுடனான திருமண உறவு விவாகரத்தான நிலையில், பேக்கரிக் கடையில் பணியாற்றிய காளீஸ்வரி (வயது 23) என்ற பெண்ணையே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அவரை நிர்வாகியாகக்கொண்டு அறக்கட்டளை ஒன்றையும் சிவக்குமார் நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையில் ஒத்தப்பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் உறுப்பினராக உள்ளார். ஐயப்பன் யோகா மற்றும் தற்காப்பு கலை பயிற்சியாளர் ஆவார்.

பணவசதி கொண்ட சிவக்குமார், பல பெரிய மனிதர்களுடன் தொடர்புடையவர் போல தன்னை காட்டிக்கொண்டதை நம்பிய ஐயப்பன், தனக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கடந்த ஆண்டு ரூ.6 லட்சம் சிவக்குமாரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், வேலை வாங்கித்தராமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த ஐயப்பன் தான் கொடுத்த பணத்தையாவது திருப்பித்தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால், பணம் தராமலும் சிவக்குமார் காலம் தாழ்த்தி வந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், சென்னைக்கு சென்ற சிவக்குமாரை தொடர்புகொள்ள முடியாத நிலையில், அவரின் மனைவி காளீஸ்வரியிடம் பணத்தை திருப்பித்தருமாறு ஐயப்பன் கேட்டுள்ளார்.  தொடர்ந்து, காளீஸ்வரி மூலமாக சிவக்குமாரை தொடர்பு கொண்டுபேசியபோது, தான் பணத்தை திருப்பிக்கொடுக்கும் வரை தனது வீட்டின் கீழே உள்ள அறையில் தங்கிக்கொள்ளுமாறு ஐயப்பனிடம் அவர் சொன்னதாக கூறப்படுகிறது’.

ஏற்கெனவே தனது 5 வயது மகனுடன் வீட்டில் தனியே வசித்துவந்த காளீஸ்வரி, திருமணத்தை மீறிய உறவில் ஐயப்பனுடன் நெருங்கி பழகியுள்ளார். தொடர்ந்து, ஐயப்பனுடன் இணைந்து வாழ விரும்பிய அவர், அதற்கு இடையூறாக இருக்கும் தனது கணவர் சிவக்குமாரை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார்.

இதற்காக, தனது ஆண் நண்பர் ஐயப்பனுடன் இணைந்து தீட்டிய திட்டத்தின்படி, தீபாவளி பண்டிகையன்று ஊருக்கு வந்த சிவக்குமாரை, தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குப்பைமேடு பகுதிக்கு காளீஸ்வரி அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சொந்த நிலத்தை பார்வையிட்டுவிட்டு திரும்பி வந்த போது தான், ஐயப்பன் தனது உதவியாளர்களான மாடசாமி கோயில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் அழகாபுரியை சேர்ந்த மருதுபாண்டி ஆகியோரை அனுப்பி சிவக்குமாரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார்.

கணவர் கொலை செய்யப்பட்டதை ஐயப்பனுக்கு செல்போன் மூலம் தெரிவித்த காளிஸ்வரி, அதன்பின் போனில் இருந்து ஐயப்பனின் எண்ணை அழித்துள்ளார். தகவல் அறிந்துவந்த ஐயப்பன், தனக்கு எதுவும் தெரியாததுபோல, அரசு மருத்துவமனையில் சிவக்குமார் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, இறுதிச்சடங்கு முடியும் வரையிலும் உடன் இருந்துள்ளார்.

கொலை சம்பவம் குறித்த விசாரணையின்போது காளீஸ்வரி முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியதால், காளீஸ்வரி மீது போலீஸூக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, காளீஸ்வரி பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை ஆய்வுக்குட்படுத்தியதில் காளீஸ்வரியும், ஐயப்பனும் கொலை சம்பவம் நடந்த அன்று மட்டும் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கணவனை தனது ஆண் நண்பர் ஐயப்பனுடன் சேர்ந்து ஆள் வைத்து கொலை செய்ததை காளீஸ்வரி ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து காளீஸ்வரி, ஐயப்பன் உள்பட கொலையில் தொடர்புடைய விக்னேஸ்வரன் மற்றும் மருதுபாண்டியை ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

திருமணம் மீறிய உறவில் தனக்கு இடையூறாக நினைத்த கணவனை, மனைவியே ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் ராஜபாளையம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.