இஸ்ரேல்..
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதலினால் இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையில் வீராங்கனையாக செயல்பட்டு வந்தவர் நோவா மர்சியானோவை (வயது 19) கடந்த அக்டோபர் 7ஆம் திகதி கிபுட்ஜ் நஹால் பகுதியில், பணய கைதியாக ஹமாஸ்அமைப்பினர் பிடித்து சென்றனர்.
கடந்த திங்கட்கிழமை இரவில், பணய கைதியாக நோவா இருக்கும் காணொளி ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டதோடு கடத்தப்பட்ட 5 வாரங்களுக்கு பின்னர் நோவா மரணம் அடைந்த தகவல் வெளிவந்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்ட காணொளி அடிப்படையில் நோவாவின் மரணம், உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் உளவு அமைப்பின் தகவலை அடிப்படையாக கொண்டே அவருடைய மரணம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு பின், மற்ற 3 பணய கைதிகளுடன் நோவா ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதற்கு ஒரு வாரம் கழித்து, நோவா கடத்தல் பற்றிய தகவலை அவருடைய குடும்பத்தினரிடம் இஸ்ரேல் அறிவித்தது.
நோவா, அவருடைய தாயாரிடம் கடைசியாக கடந்த அக்டோபர் 7ஆம் திகதி காலை 7.30 மணியளவில் பேசியுள்ளதோடு அப்போது அவர், பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கிறேன் என்றும் ஊடுருவல் ஒன்று நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
அரைமணி நேரத்திற்கு பின்பு, நோவாவுக்கு தாயார் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு பதில் வராத நிலையில் நோவாவின் மரணம் பற்றிய தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.