திருவள்ளூரில்..
தமிழக மாவட்டம் திருவள்ளூரில், ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூா் மாவட்டம், செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த ரேகா(22) என்ற இளம்பெண் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.14) பிறந்த நாள் என்பதால் வீட்டிற்கு அருகில் உள்ள அழகு நிலையம் செண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.
அப்போது, ரயில் வருவதற்குள் சென்று விடலாம் என்று நினைத்து கேட்டை கடக்க ரேகா முயன்றுள்ளார். பின்னர், கேட்டை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த விரைவு ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பொலிஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளன்று கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.