‘‘என் குடும்பம், மீண்டும் தலைகுனியக் கூடாது’’ – தங்கையின் காதலனை கொலை செய்த சகோதரன்!!

592


திருப்பத்தூரில்..திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த தும்பேரி ஜமான்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னதம்பி. இவரின் 22 வயது மகன் முரளியும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத பதின்பருவப் பெண்ணும் கடந்த ஓராண்டாகக் காதலித்துவந்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் யாருக்கும் தெரியாமல், ஆசைவார்த்தை கூறி அந்தப் பெண்ணை வீட்டிலிருந்து அழைத்துச்சென்ற முரளி, தாலிகட்டி திருமணமும் செய்துகொண்டாராம்.
இது பற்றிப் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அம்பலூர் காவல் நிலைய போலீஸார், காதல் ஜோடியைத் தேடிப்பிடித்து மீட்டனர். ‘மைனர்’ என்பதால், அந்தப் பெண்ணை பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். பெற்றோரே தாலியைக் கழற்றி வீசிவிட்டு, மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.


இதையடுத்து, தாலிகட்டிய காதலன் முரளி மீது ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரைக் கைது செய்யாமல் விசாரணை மட்டும் மேற்கொண்டுவந்தனர்.

இந்த விவகாரத்தால், ‘ஊருக்குள், தங்களுக்குத் தலைக்குனிவு ஏற்பட்டுவிட்டதாக’ நினைத்த பெண்ணின் குடும்பத்தினர், முரளி மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில், அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியின் பின்புறத்தில் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண்ணை அடிக்கடி வரவழைத்துப் பேசி, காதலைத் தொடர்ந்திருக்கிறார் முரளி.


இதையறிந்த பெண்ணின் அண்ணன் சந்தோஷ், கடும் கோபமடைந்து பலமுறை எச்சரிக்கை செய்திருக்கிறார். அப்போதும் அடங்காத முரளி, நேற்று இரவும் அந்தப் பள்ளியின் பின்புறம் வரும்படி, அந்தப் பெண்ணுக்கு எப்படியோ தகவல் கொடுத்துவிட்டு அங்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

அங்கு சென்ற முரளிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காதலிக்கு பதிலாக அவரின் அண்ணன் சந்தோஷ் கத்தியுடன் காத்திருந்தார். இதனால், திடுக்கிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்ற முரளியைப் பிடித்து, அவரின் கழுத்துப் பகுதியிலேயே கத்தியால் குத்தினார் சந்தோஷ்.

கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொட்டிய அடுத்த நொடியில் சுருண்டு விழுந்த முரளி, சில நிமிடங்களிலேயே துடிதுடித்து இறந்துவிட்டார். தகவலறிந்து சென்ற அம்பலூர் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், வழக்கு பதிவுசெய்து, கொலையாளி சந்தோஷைக் கைதுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர். இப்போது, அந்தப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடைந்து விட்டதாகவும், அடுத்த சில நாள்களில், மீண்டும் அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்ளும் முடிவில் முரளி இருந்ததாகவும் சந்தோஷுக்குத் தெரியவந்திருக்கிறது.

‘மீண்டுமொரு முறை அவரால் தன் குடும்பத்துக்குத் தலைக்குனிவு ஏற்பட்டுவிடக் கூடாது’ என்று திட்டம்போட்டு, முரளியை சந்தோஷ் தீர்த்துக்கட்டியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.