இலங்கை தொழிலதிபரைக் கடத்திய சென்னை தொழிலதிபர் : கூட்டாளிகளுடன் சிக்கியது எப்படி?

571


இலங்கையில்..இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை, பதறியபடி தொடர்புகொண்டார். பின்னர் அவர், தன்னுடைய தந்தை முகமது ஷியாம் (50) என்பவரை ஒரு கும்பல் கடத்தி வைத்துக்கொண்டு, தன்னிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகக் கூறினார்.அதனால் உஷாரான காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்த போலீஸார், இலங்கை பெண்ணிடம் விவரங்களைக் கேட்டறிந்து, சம்பவம் நடந்த வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வடக்கு கடற்கரை போலீஸார், கடத்தப்பட்ட முகமது ஷியாமின் செல்போன் நம்பரின் சிக்னலை ஆய்வு செய்தனர்.
அதோடு, முகமது ஷியாமின் மகளுக்கு வீடியோ காலில் மிரட்டியவர்களின் செல்போன் நம்பரையும் ஆய்வுக்குட்படுத்தினர். அப்போது மிரட்டல் கும்பல் பதுங்கியிருக்கும் இடம் போலீஸாருக்குத் தெரியவந்தது.


இதையடுத்து கடத்தப்பட்ட முகமது ஷியாமை மீட்க, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கே.கே.நகர் பகுதியிலுள்ள ஒரு விடுதிக்குச் சென்று, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த முகமது ஷியாமை மீட்டனர். பின்னர் அங்கிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சித்ரா (43) என்பவர் கூறியதன்பேரில் முகமது ஷியாமைக் கடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சித்ரா, இந்தக் கடத்தலுக்கு உதவியதாக ரியாஸ் அஸ்கர், வேல்முருகன், தினேஷ், ஹரிகிருஷ்ணன், சுரேஷ், பாலசுப்பிரமணி ஆகிய ஏழு பேரைக் கைதுசெய்தனர்.


அவர்களிடமிருந்து செல்போன்கள், பாஸ்போர்ட்டுகள், 4,890 ரூபாய், கார் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து வடக்கு கடற்கரை போலீஸார் நம்மிடம் பேசுகையில், “இலங்கையைச் சேர்ந்த முகமது ஷியாம், பிசினஸ் செய்துவருகிறார்.

பிசினஸில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சித்ராவின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, முகமது ஷியாம் பிசினஸில் சித்ராவுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தெரிகிறது.

ஆனால், முகமது ஷியாம் அந்தப் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், முகமது ஷியாமுக்கு தற்போது சில லட்சம் ரூபாய் கடனாகத் தேவைப்பட்டிருக்கிறது. உடனே அவர், சித்ராவின் ஆண் நண்பர் ரியாஸ் அஸ்கரிடம் அந்தப் பணத்தைக் கேட்டிருக்கிறார்.

இந்தத் தகவலை ரியாஸ் அஸ்கர் உடனடியாக சித்ராவுக்குத் தெரிவித்தார். இதையடுத்து சித்ராவின் பிளான்படி கடன் தொகையைக் கொடுப்பதாக ரியாஸ் அஸ்கர், தொழிலதிபர் முகமது ஷியாமிடம் தெரிவித்தார். அதனால் கடன் தொகையைப் பெற முகமது ஷியாம் சென்னைக்கு வந்தார்.

அங்கு சித்ரா, ரியாஸ் அஸ்கர் உட்பட சிலர் இருந்தனர். சித்ராவிடம் சிக்கிக்கொண்ட முகமது ஷியாமை அடைத்துவைத்துத் துன்புறுத்திய கும்பல், வீடியோ கால் மூலம் முகமது ஷியாமின் மகளிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது. இதையடுத்துதான் முகமது ஷியாமின் மகள் கொடுத்த தகவலையடுத்து சித்ரா உட்பட ஏழு பேரைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.