வவுனியாவில்..
வவுனியா, தரணிக்குளம், குறிசுட்ட குளம் நீரேந்து பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் தொடர்பில் இதுவரை எவ்வித அடையாளமும் காணப்படவில்லை என ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் தகவல் வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக அப்பகுதி மக்களால் கடந்த 14 ஆம் திகதி ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டதுடன் அது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்தனர்.குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
யுவதிகள் காணாமல் போனமை தொடர்பில் வவுனியாவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்த நான்கிற்கும் மேற்பட்டோர் சடலத்தை பார்வையிட்டுள்ள போதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இது குறித்த விசாரணைகளை தடவியல் பொலிஸாரின் உதவியுடன் ஈச்சங்குளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.