யாழில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் மரணம் : வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை!!

1385

யாழில்..

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், குறித்த உயிரிழப்பானது இயற்கையானது இல்லையென கூறப்பட்டதோடு, உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று(20) நண்பகல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக உள்படுத்தப்பட்ட நிலையிலே இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த, இளைஞன் உயிரிழக்கும் முன்னர் வைத்தியசாலையில் வைத்து தனக்கு சிறைச்சாலையில் நேர்ந்த கொடூரங்கள் தொடர்பில் காணொளி ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(19.11.2023) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள், வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் தான் இளைஞன் உயிரிழந்துள்ளார் என குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருக்கிறார்கள். உயிரிழந்தவரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.

இக்குற்றச்சாட்டுத் தொடர்பில் யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் காணொளி ஒன்றின் ஊடாக தனக்கு பல்வேறு சித்திரவதைகள் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளியில், “என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள். துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெட்ரோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள்.

பின்னர் எனக்கு குடிக்க மதுபானம் தந்தார்கள். தாக்குதல்கள், சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்ல கூடாது என கடுமையாக என்னை மிரட்டினார்கள். பொலிஸாரின் தாக்குதலுக்கு பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், இன்று மேற்கொள்ளப்படவுள்ள உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே குறித்த இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.