
இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் திரில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதுவரை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றினை பதிவு செய்யாத இலங்கை அணி அந்த சாதனையை பதிவு செய்துள்ளது.
நான்காம் நாளில் தனது இரண்டாவது இனிங்சில் 214 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் போட்டியை தொடா்ந்த இலங்கை, அணி மஹேல மற்றும் மத்யூசின் நிதானமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் ஸ்திரமான நிலையை அடைந்தது.
மஹேல ஜயவர்தன தனது 48 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூா்த்தி செய்து 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன்போது இலங்கை அணி 159 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.
மத்யூஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தொடா்ந்தும் வெளிப்படுத்தினார். எனினும் சந்திமால் மற்றும் பிரசாத் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் 8ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சோ்ந்த ரங்கன ஹேரத் மற்றும் மத்யூஸ் 149 ஓட்டங்களைப் பெற்றனர். இது இம்மைதானத்தில் பெறப்பட்ட இரண்டாவது சிறந்த இணைப்பாட்டமாகும். ஹேரத் 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
அணித்தலைவருக்கான ஆட்டத்தை வெளிப்படுத்திய மத்யூஸ் 160 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 457 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்துக்கு 350 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலகு வெற்றியை பெறும் நோக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சில் ஆட்டம் கண்டது. நான்காம் நாள் ஆட்ட நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.
நேற்றைய தினம் ஆட்டத்தை தொடர்ந்த இங்லாந்து அணி போட்டியை சமப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. இடைநிலை வீரர்கள் சொற்ற ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் மொஈன் அலி திறமையாக விளையாடி ஆட்டமிழக்காமல் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.
மறுமுனையில் அன்டர்சன் 50 பந்துகளை எதிர்கொண்டு எந்தவிதமான ஓட்டங்களை பெறாமல் ஆட்டமிழந்தார். இதுவொரு சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
5ம் நாள் நாள் பூர்த்தியாக மீதமாக ஒரு பந்து இருக்கும் வேளையில் இலங்கை அணி தனது திரில்லர் வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஞ்சலோ மத்யூஸ் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை தொடரின் சிறப்பாட்டக்காரராக அன்டர்சன் தெரிவுசெய்யப்பட்டார்.






