2 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய் : தனிமையில் வாழ்ந்த விரக்தியில் வெறிச்செயல்!!

397

கடலூரில்..

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த விரக்தியில் பெற்ற பிள்ளையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கந்தன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி(வயது 27). கூலி தொழிலாளி. இவரது மனைவி அகல்யா (19). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் சசிதரன் என்கிற ஆண் குழந்தை இருந்தது.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அகல்யா கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஒறையூரில் உள்ள தனது தாய் வீ்ட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 22ம் தேதி காலை 10 மணிக்கு குழந்தை சசிதரனுக்கு அகல்யா சாப்பாடு ஊட்டியதாகவும், பின் குழந்தை தூங்கிய நிலையில் பகல் 12:30 மணிக்கு குழந்தையை எழுப்பிய போது எழுந்திருக்காததால், உடனடியாக ஒறையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது குழந்தை சசிதரன் உடலை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பிரேத பரிசோதனையில் குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், உடனடியாக புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து அகல்யாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அகல்யா திருச்செங்கோடு பகுதிக்கு மணிலா அறுவடைக்காக சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரை காதலித்து தனிமையில் இருந்து வந்த போது கர்ப்பமாகி உள்ளார்.

இதனால் கடந்த 2021 பிப்ரவரி மாதம் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் அகல்யா நாமக்கல் மாவட்டம், நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அகல்யாவுக்கு 17 வயது என்பதாலும், குழந்தை திருமணம் நடந்திருப்பதாலும், சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சக்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன் காரணமாக தனது தாய் வீட்டில் வந்து தங்கிய அகல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் 2 ஆண்டுகளாக மீண்டும் சக்தியுடன் செல்லாமல் இங்கேயே தங்கி விட்டார். இதனால் கணவர் துணை இன்றியும், பெற்றோர் இல்லாததாலும் தனிமையில் வாழ்ந்து வந்த அகல்யாவுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சம்பவத்தன்று தனது இரண்டு வயது ஆண் குழந்தை சசிதரனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, இட்லி சாப்பிட்டதால் உயிரிழந்ததாக நாடகமாடியது அம்பலமானது.

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அகல்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.