வவுனியாவில் ஊடக அடக்கு முறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை வவுனியா ஊடக அமையத்தினர் நாளை (02.12.2023) சனிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கவுள்ளனர் . இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகளும், அவர்களை அச்சுறுத்தி பழிவாங்கும் செயற்பாடுகளும் அரச இயந்திரங்களான பொலிசாராலும், இராணுவம் மற்றும் புலனாய்வு துறையினராலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாகவே, வடக்கு-கிழக்கில் ஊடகவியலாளர்கள் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதுடன், வவுனியாவில் செய்தி சேகரில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் பொலிசாரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளரும் ஊடக அமையத்தின் தலைவருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் மீதும் பொலிசாரால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரியும் வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை (02.12) காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்,
பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊடகவியலாளர்கள் அனைவரையும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தை வலுப்படுத்துமாறு வவுனியா ஊடக அமையத்தினர் கோரியுள்ளனர்.