ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி!!

389

ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் தோழர் என்.பிரதீபன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு – கிழக்குப் பகுதிகளில் பொலீஸார் நடந்து கொள்ளும் முறையானது நாட்டின் அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளதுடன், அப்பாவி மனிதர்களின் உயிர்களை பலி
எடுப்பதாகவும் உள்ளது.

அந்த விடயங்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு கைது செய்யப்படுவது இலங்கை முழுவதும் நடந்து வருகின்றது.

அந்தவகையில், வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு பொலீஸாரும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து இழைக்கப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக வவுனியா மாவட்டஊடகவியலாளர்களால் நடாத்தப்படும் கவனயீர்ப்பு பேராட்டத்திற்கு கட்சி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

இலங்கைப் பொலீஸார் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுகின்றார்களா? எனும் சந்தேகம் எழுகின்றது. யாழ்ப்பாணம் சித்தங்கேணியிலும், ஒரு அப்பாவி இளைஞன் பொலீஸ்
நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார்.

இதே போன்று தான் வவுனியாவில் மாவீரர் நினைவு நாளில் அரசாங்க பாதுகாப்புதுறை நடந்து கொண்ட விதத்தை வன்மையாகக்
கண்டிக்கின்றோம். ஊடகவியலாளர்களுக்கு இந்த நிலை எனில் அப்பாவி பொது மக்களுக்கு என்ன நிலை என்பதை உணர வேண்டியவர்களாய் இன்று தமிழ்ச் சமூகம் உள்ளது. என்பதே
உண்மையாகும்.

02.12.2023 சனிக்கிழமை வவுனியா பழைய பஸ் நிலையத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும் கண்டன கவனயீர்ப்பு பேராட்டத்தை பலப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.