வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் : பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மாணவி விதுர்ஷா!!

603

இலங்கையில்..

கல்வி கற்பதற்கு வளர்ச்சி, ஊனம் என்பதெல்லாம் ஒரு தடையே கிடையாது. அப்படியான விசேட தேவையுடையவர்களுக்கும் தனித் திறமை இருக்கும் என இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த சித்தியைப் பெற்ற விசேட தேவையுடைய மாணவியான சாந்தலிங்கம் விதுர்ஷா தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தன.நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை எடுத்த மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் தொடர்பில் செய்திகள் வெளிவந்துள்ளன.

அதேசமயம், மிகவும் இக்கட்டான சந்தர்ப்பங்களில் பரீட்சை எழுதி சிறந்த சித்திகளைப் பெற்ற மாணவர்கள் தொடர்பான தகவல்களும் வெளியிடப்பட்டன.

இந்தநிலையில், மட்டக்களப்பு – களுவன்கேணி, பலாச்சோலை பகுதியில் வாழும் சாந்தலிங்கம் விதுர்ஷா என்ற விசேடத் தேவையுடைய மாணவியும் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளுடன் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளதுடன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் மூத்த பிள்ளைதான் இந்த விதுர்ஷா. தொடர்ந்து நடப்பது கடினம், வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை, நெஞ்சில் ஒரு கட்டி, மாதாந்தம் சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை என பல சோதனைகள் இருந்தும்,

தான் படித்து பட்டம் பெற வேண்டும் என்பதில் விதுர்ஷா விடாப்பிடியாக இருந்துள்ளார்.இவரும், இவரது தங்கையும் இணைந்து சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இருவருக்குமே சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ள நிலையில், இருவரும் உயர்தரம் கற்பதற்கு தயாராகியுள்ளனர்.

தனது வெற்றி தொடர்பில் மாணவி விதுர்ஷா தெரிவிக்கையில்,“என்னைப் போல உங்களது வீட்டிலும் ஒருவர் இருந்தால், அவரை முடக்கி வைக்காதீர்கள். அவர்களுக்குள்ளும் தனித் திறமை இருக்கும். அவர்களையும் நீங்கள் வெளி உலகுக்கு கொண்டு வரவேண்டும்.

பிள்ளைகளுக்கு ஊனம் என்பது அவர்களது கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள ஒரு தடையில்லை. அந்த எண்ணத்தை வெளியில் உள்ளவர்கள் தான் அவர்களுக்கு புகுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.