ராகமையில்..
தனது சொந்த மகனின் நகைக்கடையில் திருடிய தாய் உள்ளிட்ட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராகமை நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,ராகமை நகரின் மத்தியில் அமைந்துள்ள நகை அடகுக் கடையொன்றில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று முன் தினம் (09) பிற்பகல் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அடகுக் கடையில் கொள்ளையிடப்பட்டிருந்த 14 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஆறு இலட்சத்து இருபத்தி ஒன்பதாயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொள்ளைச் சம்பவம் உரிமையாளரின் தாய் மற்றும் அடகு கடையின் காசாளர் ஆகியோரின் ஒத்துழைப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் வருவதற்கு முன், அடகுக் கடையின் காசாளர் நகைகளை ஒரு பையில் இடுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.இதற்கிடையில், கொள்ளையின் பிரதான சந்தேகநபரான ராகம ரெய்லி அங்கு வந்த பின்னர் அவரது உத்தரவைப் பின்பற்றியே ஏனைய கொள்ளையர்கள் அடகு கடைக்குள் நுழைந்துள்ளனர்.
எனினும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே அங்கு இருந்த சிசிடிவி கேமரா அமைப்பை கொள்ளையர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.அதன்படி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.