வவுனியா பேயாடி கூழாங்குளம் இந்து மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய இராணுவம் இடையூறு!!

407

வவுனியா, கொக்குவெளி வீதியில் உள்ள பேயாடி கூழாங்குளம் இந்து மயானத்தில் இன்று காலை சடலம் ஒன்றினை தகனம் செய்ய சென்றபோது இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இராணுவத்தினருடன் கலந்துரையாடியதை அடுத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பேயாடி கூழாங்குளம், கொக்குவெளி, பூனாமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் பாராம்பரியமான இந்து மயானமே பேயாடிகூழாங்குளம் இந்து மயானம். யுத்தம் காரணமாக இப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து சென்று வேறு வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் அப் பகுதிக்கு அண்மித்ததாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் பேயாடி கூழாங்குளத்தைச் சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்தமையால் தமது பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி அப் பகுதி இந்து மயானத்தில் உடலை தகனம் செய்யவதற்கான ஆயத்த வேலைகளைச் செய்வதற்கு மரணமடைந்தவர்களின் உறவினர்கள் சென்றபோது பெரும்பான்மை இன மதகுரு ஒருவரும் அப் பகுதி இராணுவத்தினரும் இணைந்து இது பௌத்த மக்களின் பிரதேசம். இங்கு பௌத்த அடையாளங்கள் இருக்கின்றன என இராணுவ முகாம் இருந்த பகுதியில் உள்ள அடையாளங்களைக் காட்டி அனுமதி மறுத்தனர்.

இதனையடுத்து அங்கு திரண்ட இளைஞர்களும் அப் பகுதி மக்களும் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

குழப்ப நிலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், இது எனது பிரதேசம். இங்கு எனது உறவினர்களுக்கும் காணிகள் உண்டு. நாம் பரம்பரை பரம்பரையாக பராமரித்து வந்த நிலம். இங்கு தான் எமது மக்களின் தகனக் கிரியைகள் நடைபெற்று வந்தன. நடைபெறவும் வேண்டும். இதனை எப்படி தடுக்க முடியும் எனக் கூறி இராணுவத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் பின் இராணுவத்தினர் தற்போது தகனக் கிரியை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் மரணம் அடைந்தவர்களின் உறவினர்களாலும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு அப் பகுதி கிராம அலுவலர், வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா ஆகியோரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

V1 V2