வவுனியா நகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!!

328

வவுனியா நகரசபையில் வேலை நிறுத்தம் செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களை நிரந்தரமாக்கா வேண்டும் என்பது உட்பட 12 கோரிக்கைகளை முன்வைத்து நகர சுத்திகரிப்பு தொழிலாளிகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆதரவுடன் இடம்பெறும் இப் போராட்டத்தில் வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதார தொழிலார்களில் 7 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும், வட மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் ஆளணி அதிகரிக்கப்படவேண்டும், வவுனியா நகரசபையால் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காவல் கடமை பதவிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்,

உள்ளக வெற்றிடங்கள் உள்ளக தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டும், 30 வருடங்களாக பணியாற்றுபவர்களுக்கு இது வரை தர உயர்வு வழங்கப்படாமையினால் அரச சுற்று நிருபம் 01- 2001 இற்கு அமைவாக தரமுயர்த்தல் வழங்கப்படவேண்டும், வேறு திணைக்களங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும், தொழிலார்களுக்கு சாப்பாட்டறை கட்டிக்கொடுக்கப்படவேண்டும்.

தொழிலாளர்களுக்கான மலசலகூடம் புனரமைப்பு செய்து தரப்படவேண்டும். அந்தந்த இடங்களில் பணிபுரிபவர்கள் அங்கேயே பணி புரிவதற்கு அனுமதிக்கப்படவேண்டும். சுகாதார பகுதி நலன்புரிச்சங்கத்திற்கு நகரசபையால் சலுகைகள் வழங்கப்படவேண்டும், உமா எனப்படும் சுகாதார தொழிலாளியை தொழிலாளிகளுடன் பணியாற்ற அனுமதிக்க வேண்டும், வட மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்படவேண்டும் என்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து இப் பொராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி. சிவமோகன். ஆர். இந்திரராஜா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சில மணி நேரங்கள் அமர்ந்திருந்து கலந்துரையாடியிருந்தனர்.

இப் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன்,

வவுனியா நகரசபையில் பணியாற்றி வந்த தற்காலிக சமயாசமய ஊழியாகள் 52 போர் இருந்தனர். அவர்களில் 45 பேருக்கு வட மாகாண முதலமைச்சரினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 7 பேருக்கு ஆளணி அங்கிகாரம் இல்லை என்ற காரணத்தை காட்டி வவுனியா நகரசபையின் செயலாளரினால் 2014 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் முதலாம் திகதி பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டள்ளார்கள்.

ஆனால் அவ் ஆளணி அங்கீகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் அன்றே செயலாளர் கோரிக்கை விடுத்திருக்கலாம். ஆனால் அவர் ஏதோ மறந்து விட்டாரோ தெரியவில்லை. ஆனால் அன்று அதனை செய்திருந்தால் இன்று இந்தபோராட்டம் வந்திருக்காது.

இதேவேளை வட மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் உள்ள ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் ஏனைய விடயங்களையும் வலியுறுத்தி வருகின்றோம். எனவே இப் போராட்டத்தை வட மாகாணத்திற்கு விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தார்.

இதேவேளை இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் சி. சத்தியசீலனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

7 பேர் ஏற்கனவே இந்த சபையில் நிமித்த அடிப்படையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டவாகள். இவர்களுடைய சேவைக் காலத்தை ஒவ்வொரு வருடமும் நாம் புதுப்பித்துக்கொள்வோம்.

இந்தவகையில் இந்த 7 பேரையும் ஏற்கனவே எமது நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்கவதற்கான நடவடிக்கையை நாம் ஆளணிக்கு அமைவாக எடுத்திருந்தபோதிலும் எனினும் அவர்கள் அந்த தகுதிகளை அதாவது புள்ளிகளை பெறாமையினால் அவர்கள் தெரிவு செய்யப்படவில்லை என எண்ணுகின்றேன்.

அத்துடன் ஆளணியும் முழுமையாக நிரப்பப்பட்டு விட்டது. எனினும் இவர்களது போராட்டம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளேன் என தெரிவித்தார்.

இந் நிலையில் இப் போராட்டத்தை தாம் தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஆர். சித்திரன் தெரிவித்தார்.

 

11 12 13