1000 ரூபாய் கடனை திரும்பக் கேட்டதால் ஆத்திரம் கத்திரிக்கோலால் குத்தி நண்பனை கொன்ற இளைஞன்!!

836

வேளச்சேரியில்..

மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில்நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 130வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (22). அதே குடியிருப்பில் 106வது பிளாக்கில் வசித்து வருபவர் ராஜேஷ் (22). நண்பர்களான இவர்கள், சென்ட்ரிங் வேலை செய்து வந்தனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன், கார்த்திக்கிடம், 1000 ரூபாயை ராஜேஷ் கடனாக பெற்றுள்ளார். ஆனால், இந்த பணத்தை கார்த்திக் பலமுறை கேட்டும், திருப்பி கொடுக்காமல் ராஜேஷ் அலைக்கழித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு 9.30 மணியளவில், அதே பகுதி 26வது பிளாக்கில் வசிக்கும் தினேஷ் என்பவருடன், ராஜேஷ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக், ‘‘மது வாங்க பணம் இல்லை. அதனால், என்னிடம் கடனாக பெற்ற 1000 ரூபாயை திரும்பி கொடு,’’ என்று ராஜேஷிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ராஜேஷ், ‘‘என்னிடம் பணம் இல்லை’’, என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக், ராஜேஷை ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, உடனிருந்த நண்பர் தினேஷ், இருவரையும் சமாதானம் செய்துள்ளார். பின்னர், ராஜேஷை அங்கிருந்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.

ஆனாலும், ஆத்திரம் தீராத கார்த்திக், சிறிது நேரத்தில் தினேஷ் வீட்டிற்கு சென்று கதவை தட்டினார். நீண்ட நேரத்திற்கு பிறகு தினேஷ் கதவை திறந்து, ‘‘ஏன் இப்படி கதவை தொடர்ந்து தட்டுகிராய்,’’ என கேட்டுள்ளார்.

அப்போது, ‘‘என்னிடம் கடனாக வாங்கி பணத்தை ராஜேஷ் திருப்பி கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வேன்,’’ என கார்த்திக் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை வீட்டினுள் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ராஜேஷ் ஆத்திரமடைந்து, அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்து கார்த்திக் மார்பு மற்றும் விலா பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

இதையடுத்து ராஜேஷ், தினேஷ் மற்றும் சக நண்பர்கள் சேர்ந்து மயங்கிய நிலையில் இருந்த கார்த்திக்கை மீட்டு, ஆட்டோவில் ஏற்றிகொண்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து, ஆட்டோவில் கார்த்திக் உடலை ஏற்றிக்கொண்டு பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த ராஜேஷ், ஆட்டோவை காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தினார். பின்னர் காவல் நிலையத்திற்குள் சென்று அங்கிருந்த போலீசாரிடம், ஆத்திரத்தில் தனது நண்பன் கார்த்திக்கை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்துவிட்டேன்.

அவரது உடல் காவல் நிலையத்தின் வெளியில் நின்றுள்ள ஆட்டோவில் உள்ளது,’’ என்று கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக வெளியே சென்று ஆட்டோவில் பார்த்தனர்.

அதில், கார்த்திக் சடலம் இருந்தது. இதனையடுத்து, கார்த்திக்கின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.