
உலகக்கிண்ண கால்பந்து தொடரின் “சுற்று16” சுற்றுப் போட்டியில் ஜேர்மனி அணி வெற்றி பெற்றது.
போர்டோ அல்கிரேவில் நடந்த இப் போட்டியில், மூன்று முறை சம்பியன் பட்டம் வென்ற ஜேர்மனி அணி, அல்ஜீரியாவை எதிர்கொண்டது.
போட்டியின் துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க மும்முரமாக முயற்சித்தனர். இருப்பினும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
பின் விறுவிறுப்பாக துவங்கிய இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து போட்டி 0-0 என சமநிலையானது.
பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் ஆரம்பத்திலேயே ஜேர்மனி வீரர் ஸ்கூரல் (90+2) முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து அசத்திய ஜெர்மனி அணிக்கு கடைசி நிமிடத்தில் ஓசில் (120) இரண்டாவது கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அல்ஜீரியா வீரர் டிஜாபாவ் (120+1) இதற்கு பதிலடி கொடுத்தும் எந்த புண்ணியமும் இல்லாமல் போனது. இதன்மூலம் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
அல்ஜீரியாவை 1-2 என வீழ்த்திய ஜெர்மனி அணி, கடந்த 1982ல் நடந்த உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில், அடைந்த தோல்விக்கு 32 ஆண்டுகளுக்கு பின் தற்போது பழிதீர்த்துக் கொண்டது.





