
சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தனது தந்தை உயிருடன் திரும்பி வருவார் என்று அவரது மகன் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாசு, சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் விபத்துக்குள்ளான கட்டிடத்தில் மேசனாக வேலை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அவருடைய மகன் நந்தகோபால் மற்றும் உறவினர்கள் போரூர் வந்துள்ளனர். பின்னர், மருத்துவமனையில் தனது தந்தையின் புகைப்படம் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு மருத்துவரிடமும் அவர் தேடி அலைந்துள்ளார்.
நந்தகோபால் தனது தந்தை குறித்து கூறுகையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வேலை முடிந்ததும், சென்னையில் இருந்து புறப்பட்டு அப்பா வீட்டுக்கு வந்துவிடுவார்.
மேலும், வழக்கம்போலவே, கடந்த சனிக்கிழமையும் தொலைபேசி மூலம் அடுத்தநாள் வீட்டுக்கு வரவுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அன்றைய தினம் இரவு அவருடைய போன் சுவிட்ச் ஓப் செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து, உடன் வேலை பார்த்த அவருடைய நண்பர்களை தொலைபேசியில் அழைத்து பார்த்தோம், ஆனால் அனைவரது போன்களும் சுவிட்ச் ஓப் ஆகியிருந்தன.
மறுநாள் விபத்து குறித்து அறிந்து போரூர் வந்து, காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரத்தை கேட்டறிந்தோம். ஆனால் அதில் எனது தந்தை பெயர் இல்லை.
மேலும் தற்போது வரை எனது தந்தை குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.





