வவுனியாவில் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக 22 இலட்சம் ரூபா தண்டம்!!

1863

வவுனியாவில்..

வவுனியாவில் 2023ம் ஆண்டில் வர்த்தக நிலையங்களிற்கு எதிராக 22 இலட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூறு ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி சத்துர வன்னி நாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது 771 வியாபார நிலையங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் நிறுவன முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்த 771 வழக்குகளும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், காட்சிப்படுத்துதல், விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தல், கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலையில் பொருட்களை விற்பனை செய்தல், போன்ற பல்வேறு விடயங்களிற்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகும்.

இதேவேளை பாவனையாளர்கள் அதிகார சபையினால் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார், அரச அலுவலகர்கள் என பல தரப்பினருக்கும் பாவனையாளர் உரிமைகள், பாவனையாளர் கடமைகள், பாவனையாளர் சட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.