
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான 35 வயதான லூ வின்சென்ட் 23 டெஸ்ட் மற்றும் 102 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
இங்கிலாந்து கவுண்டி கிளப்பில் விளையாடிய லூ வின்சென்ட் அந்த போட்டி மட்டுமின்றி சம்பியன்ஸ் லீக் மற்றும் வங்காளதேச பிரிமியர் லீக் போட்டியிலும் பணத்துக்காக தனது தகுதிக்கு குறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
2008 முதல் 2012ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 5 நாடுகளில் நடந்த 12 போட்டிகளில் அவர் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சூதாட்ட தடுப்பு அதிகாரிகளின் விசாரணைக்கு உள்ளான லூ வின்சென்ட்டிடம் இங்கிலாந்து கிரிக்கெட் சபை மற்றும் இங்கிலாந்து பொலிசாரும் விசாரணை நடத்தினார்கள். இருப்பினும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தன் மீதான குற்றசாட்டை வின்சென்ட் மறுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென லூ வின்சென்ட் தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
‘நான் ஒரு மோசடி பேர் வழி தான். நான் தொழில்முறை வீரர் என்ற அந்தஸ்தை தவறாக பயன்படுத்தி பலமுறை பணத்துக்காக ஆட்டத்தின் முடிவை நிர்ணயித்து இருக்கிறேன். பல ஆண்டுகளாக வெளிவராத இந்த ரகசியத்துடன் நான் வாழ்ந்து இருக்கிறேன்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த உண்மையை வெளி உலகுக்கு சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் எனது நாட்டுக்கும், விளையாட்டுக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் துரோகம் செய்துவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
லூ வின்சென்ட் சூதாட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களில் அவருக்கு ஆயுட்கால தடையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.
அவர் எந்தவொரு கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாது. சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி அமைப்பும் அவருக்கு இதேபோல் ஆயுட்கால தடை விதித்து இருக்கிறது.





