
நெல்லை பகுதியில் கடந்த சில நாட்களாக நடிகை ஓவியா நடிக்கும் சீனி என்ற சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. களவாணி, கலகலப்பு, ஜில்லுனு ஒரு சந்திப்பு, யாமிருக்க பயமே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ஓவியா. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இயக்குனர் ராஜதுரை இயக்கும் இந்த படப்பிடிப்பின் இடைவேளையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
நான் நடித்த படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் அமோக ஆதரவு தந்து வெற்றி அடையச் செய்துள்ளனர். அவர்களுக்கு என்றென்றும் எனது நன்றி. தமிழை தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளேன். தமிழில் தற்போது சீனி என்ற படத்திலும், சண்டமாருதம் என்ற படத்தில் நடிகர் சரத்குமாருடனும் நடித்து வருகிறேன்.
நான் முதலில் நடித்து வெற்றிபெற்ற களவாணி படத்தை என்னால் மறக்க முடியாது. நான் எந்த ஹீரோவுடன் நடிக்கிறேன் என்பதில் பெருமிதம் அடைய மாட்டேன். நல்ல கதாபாத்திரமாக அமைந்து ரசிகர்கள் திரையில் படத்தை பார்த்து பாராட்டும் போதுதான் பெருமிதமாக இருக்கும். பெரிய பெரிய கதாநாயகர்களுடன் எல்லாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் எனக்கு பிடித்த பெரிய நடிகர் ரஜினிகாந்த் நான் சிறுவயதில் இருந்தே அவரது படத்தை நிறைய பார்த்துள்ளேன்.
நடிக்க வந்து விட்டால் இப்படி நடிக்க மாட்டேன், அப்படி நடிக்க மாட்டேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. எந்த வேடம் என்றாலும் அதை மனநிறைவோடு நன்றாக செய்ய வேண்டும். இந்த காலத்தில் கல்லூரி மாணவிகளே கிளாமராக உடையணிந்து தாராளமாக செல்கிறார்கள். நாங்கள் இதைத்தான் சினிமாவில் செய்கிறோம்.
புலிவால் படத்தில் கதைக்கு ஏற்றாற்போல் முத்தக்காட்சி தேவைப்பட்டது. அதை தயங்காமல் நடித்தேன். கதையின் காட்சிகளுக்கு ஏற்ப கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை. தமிழ் சினிமாவில் மற்ற கதாநாயகி நடிகைகளில் எனக்கு பிடித்த தோழிகள் யாரும் இல்லை. பார்த்தால் ஹாய் சொல்லும் அளவுக்குத்தான் பழக்கம். ஆனால் படிக்கும்போது எனக்கு நிறைய தோழிகள் உண்டு.
தஞ்சையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் எனக்கு ரசிகர் மன்றம் அமைக்கப்போவதாக கூறினார். அது அவர் விருப்பம். இப்போதுதான் நெல்லைக்கு முதன் முதலாக வந்துள்ளேன். படப்பிடிப்பின்போது பொதுமக்கள் எனக்கு மிகுந்த வரவேற்பு கொடுத்து பாசமாக நடந்து கொண்டனர். நெல்லை அல்வா கொடுத்தனர். உண்மையில் நெல்லை அல்வாவுக்கு தனி ருசியுள்ளது. தினசரி கேட்டு வாங்கி சாப்பிடுகிறேன் என்று அவர் கூறினார்.





