முகக்கவசம் அணியுமாறு இலங்கையில் மக்களுக்கு அறிவுறுத்தல்!!

655

இலங்கையில்..

நாட்டில் தற்போது இன்புளுவென்சா மற்றும் அதனை ஒத்த வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவவதாக வைரஸ் நோய்கள் தொடர்பான சுகாதார வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, இருமல் இருப்பவர்கள் அது மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்புளுவென்சா மற்றும் அதனை ஒத்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை புண், சளி அல்லது அடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்றவைகள் ஏற்படலாம். இவ்வாறு அடையாளம் காணபட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக நவம்பர் முதல் பெப்ரவரி மாதம் வரையிலும் மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலும் இரண்டு காலக்கட்டங்களில் இன்புளுவென்சா வைரஸ் பரவும். கடந்த டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பரிசோதனைகளில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு 25 சதவீதம் பேருக்கு இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு, லேடி ரிஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை உள்ளிட்ட 20 வைத்தியசாலைகளில் இன்புளுவென்சா மற்றும் அதனை ஒத்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் கண்காணிப்பை அதிகரிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, நாளாந்தம் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன. தற்போது பரவும் முதன்மையான வைரஸ் வகை இன்புளுவென்சா ஏ என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கோவிட் 19 வைரஸ் தொடர்பிலும் கண்காணிப்பை மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் 500 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 ஆறு பேருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இன்புளுவென்சா போன்ற நோய்களால் பாதிக்கப்படக் கூடியவர்களாவர். எனவே, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.