சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி குடும்பஸ்தர் : பொலிஸாருக்கு ஏற்பட்ட பெரும் அவமானம்!!

1350

குருணாகலில்..

குருணாகலில் அப்பாவி குடிமகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பொலிஸ் திணைக்களத்திற்கு பெரும் அவமானம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த செயற்பாடு தனிப்பட்ட ரீதியிலும் திணைக்களமும் எதிர்கொண்ட பாரிய அவமானம் என குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், மிகவும் போராடி சம்பாதித்த மக்களின் நம்பிக்கையை ஒரே நொடியில் அழிக்க முடியும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவுமில்லை என அவர் கூறியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட இந்த அதிகாரியின் நடவடிக்கையால் வீதியில் பயணித்த அப்பாவி குடிமகன் ஒருவரின் துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டுள்ளது.

இழப்பீடு அல்லது விலையால் ஈடுகட்ட முடியாத இழப்பு எனவும் ஒரு குடும்பத்திற்கு கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு தந்தை இல்லாமல் போயுள்ளதென அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய இந்த அதிகாரி தொடர்பில் நியாயமானதும் வெளிப்படையானதுமான விசாரணையை நடத்துவதற்கு சாத்தியமான அனைத்து சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சுஜித் வேதமுல்ல உறுதியளித்துள்ளார்.