5 வயது குழந்தை கங்கையில் மூழ்கடித்து கொலை : மூடநம்பிக்கையால் விபரீதம்!!

528

உத்தராகண்ட் மாநிலத்தில்..

நாகரீகமும், தொழில்நுட்பமும் எத்தனையோ வளர்ந்துவிட்ட போதும் இன்னும் பல இடங்களில் மூடநம்பிக்கைகள் மாறவில்லை. இவை பல நேரங்களில் விபரீதத்தில் கொண்டு விடுகிறது. அந்த வகையில் உத்தராகண்ட் மாநிலத்தில் 5 வயது ஆண் குழந்தைக்கு ரத்தப் புற்று நோய் ஏற்பட்டது.

இதனை குணப்படுத்துவதாக குழந்தையை பெற்றோர் கங்கை நீரில் மூழ்கடித்து கொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்த கொடூர வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் இருந்து கங்கைக்கு வருகை தந்த குடும்பத்தினர் தங்கள் 5 வயது ஆண் குழந்தையுடன் உத்தராகண்ட் மாநிலம், ஹர்கி பௌரிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைக்கு ரத்த புற்று நோய் இருந்ததால் கங்கை நீரில் மூழ்கி எடுத்தால் நோய் குணமாகும் என நம்பிக்கையில் தொடர்ந்து குழந்தையை தண்ணீரில் வைத்து அமுக்கி எடுத்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பெண் ஒருவர் குழந்தையை நீண்ட நேரம் நீரில் மூழ்க வைப்பதும், அங்கிருந்தவர்கள் அதனைக் கண்டிப்பதையும் காணமுடிகிறது. ‘இந்த குழந்தை எழுந்து நிற்கும். இது எனது வாக்குறுதி’ என ஆவேசமாக கூறி வருகிறார்.

தொடர்ந்து தண்ணீரில் மூழ்க வைத்ததும், அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டனர். அப்போது ஆவேசம் அடைந்த அந்த பெண் குழந்தையை மீட்ட நபரை தாக்க முயற்சித்துள்ளார். தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட குழந்தை மயக்கமடைந்தது.

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கங்கை நீரில் மூழ்கடித்தால் நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையில் குழந்தையை பெற்றோரே மூழ்கடித்தே கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.