இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் மரணம்!!

1871

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவால் இலங்கையில் வைத்து இன்று (25.01.2024) மாலை காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 47 வயதாகும்.

5 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதியுற்றதாகவும், இதன் காரணமாக அவர் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் உயிரிழந்துள்ள நிலையில், நாளை மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தற்போது கொழும்பில் தங்கியிருக்கும் இசைஞானி இளையராஜா, அவரது மகள் பவதாரணி காலமான தனியார் வைத்தியசாலையை நோக்கி விரைந்துள்ளார்.

இதேவேளை, இசைஞானி இளையராஜாவின் விசேட இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விபரங்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை. குறித்த இசை நிகழ்ச்சிக்காக நேற்றையதினம் இசைஞானி இளையராஜா இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.