வவுனியா வடக்கு கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு!!

684

பல வருடங்களுக்கு பின்னர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பின் தங்கிய பாடசாலையான கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குடிநீர் திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களின் நிதிப் பங்களில் வவுனியா ஊடகவியலாளர்களினால் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் தைப்பூச தினமான நேற்று (25.01) பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குடிநீர் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக கடந்து 5 வருடங்களுக்கு மேலாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பாக குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் பெற்றோர் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், அதிபரின் வேண்டுதலுக்கு அமைவாகவும் வவுனியா ஊடகவியலாளர்கள் புலம்பெயர் தேசத்தில் தற்போது வசிக்கும்,

வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அவரால் வழங்கப்பட்ட நிதித் திட்டத்தின் மூலம் மோட்டருடன் கூடிய குழாய் கிணறு நிர்மாணிக்கப்பட்டு, குடிநீர் தாங்கியும் நிறுவி பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, அதிதிகள் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்ததுடன், பெயர் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தனர். மாணவர்களுக்கு குடி நீரும் அதிதிகளால் வழங்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வின் நினைவாக பயன்தரும் மரநடுகையும் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் மா.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சுஜீபன் பிரியதர்சினி, செட்டிகுளம் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜன், ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், திருமதி சி.திவியா, வ.பிரதீபன், இ.சங்கர், சமுதாய சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.