வவுனியாவில் பத்து வருடங்களுக்கு மேலாக தனிநபரின் ஆக்கிரமிக்கப்பட்ட வீதி : நகரசபை அதிரடி!!

3288

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனிநபரின் ஆக்கிரமிப்பில் இருந்த வீதி ஒன்று வவுனியா நகரசபையால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நகரசபை செயலாளர் இ.தயாபரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, திருநாவற்குளம், கிராம அபிவிருத்திச் சங்க வீதியின் இரண்டாம் ஒழுங்கையின் ஒரு பகுதி தனிநபர் ஒருவரினால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வழிமறிக்கப்பட்டு கொட்டகை அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா நகரசபையின் செயலாளரால் குறித்த தனிநபருக்கு அறிவித்தல் வழங்கியும் அந்நபரால் வீதி பொதுமக்கள் பாவனைக்கு வழங்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து நகரசபையினர் அதிரடியாக செயல்பட்டு பொலிசாரின் துணையுடன் குறித்த வீதியில் தனிநபரால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையை அகற்றி அக்கொட்டகையினை நகரசபையினர் கையகப்படுத்தி உள்ளனர்.

அத்துடன் குறித்த தனிநபருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.