காதலியை ஹோட்டல் அறையில் சுட்டுக்கொன்ற காதலன்!!

182

புனேயில்..

புனேயில் உள்ள ஹோட்டல் அறையில் காதலியை சுட்டுக்கொன்ற காதலன் மும்பையில் கைது செய்யப்பட்டார். புனேயில் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஹோட்டல் அறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மும்பை அருகில் இருக்கும் நவிமும்பை போலீஸாருக்கு உளவாளி ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் ரிஷப் நிகம்(27) என்பவரை பிடித்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர் புனேயில் உள்ள ஹோட்டல் அறையில் தனது காதலியை சுட்டுக்கொலை செய்துவிட்டு உத்தரப்பிரதேசத்திற்கு தப்பிச்செல்ல முயன்றது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் புனேயில் உள்ள ஹோட்டல் அறையை சோதனை செய்து பார்த்தபோது அங்கு பெண் ஒருவர் சுப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். போலீஸார் வரும் வரை ஹோட்டல் ஊழியர்களுக்கு கூட இக்கொலை குறித்து தெரியாமல் இருந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் வந்தனா திவேதியாகும். அவர் புனேயில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் வந்தனாவும், ரிஷப் நிகமும் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் சமீப காலமாக வந்தனா ரிஷப்பை உதாசீனப்படுத்த ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. ரிஷப் நிகம் 12வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் வந்தனா இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். புனே ஹிஞ்சேவாடியில் உள்ள ஹோட்டலில் அவர்கள் இரண்டு பேரும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

லக்னோவை சேர்ந்த வந்தனாவுடன் ஹோட்டல் அறையில் நிகம் தன்னை உதாசீனப்படுத்துவது குறித்தும், வந்தனாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபத்தில் வந்தனாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ரிஷப் நிகம் தப்பிச்சென்றுவிட்டார்” என்று தெரிய வந்தது. நிகம் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டது கூட ஹோட்டல் ஊழியர்களுக்கு கேட்கவில்லை.

ஹோட்டல் இருக்கும் இடத்திற்கு அருகில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பாண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. அந்த சத்தத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் தங்களுக்கு கேட்கவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் நிகம், வந்தனாவை சந்திப்பதற்காகவே புனே வந்துள்ளார். இருவரும் 25ம் தேதியில் இருந்து புனே ஹோட்டல் அறையில் தங்கியுள்ளனர்.

சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நிகம் ஹோட்டல் அறையில் இருந்து சென்றுள்ளார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக தான் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாகவும், வந்தனாவை சுட்ட துப்பாக்கியை புனேயில் போட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.