அரையிறுதியில் அதிரடியாய் நுழைந்த ஜேர்மன் மற்றும் பிரேசில் அணிகள்!!

456

Germany

பிரான்ஸ் -ஜெர்மனி

உலக கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பலம்பொருத்திய பிரான்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஜெர்மனி.

ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது காலிறுதியில், பலம்பொருத்திய அணிகளான ஜெர்மனி, பிரான்ஸ் மோதின. இரு அணிகளும் முன்னாள் சம்பியன் என்பதால், ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக போராடின.

ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் கிடைத்த பிரீ–கிக் வாய்ப்பில் ஜெர்மனியின் டோனி குரூஸ் பந்தை பிரான்ஸ் கோல் ஏரியாவுக்குள் துல்லியமாக அடித்தார். இதனை அப்படியே தலையால் முட்டி, மேட்ஸ் ஹம்மல்ஸ் வளைக்குள் தள்ள, ஜெர்மனி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் பிரான்ஸ் வீரர்கள் திணறினர். நட்சத்திர வீரர் பென்சிமா, வெல்பியுனா மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாகின. இவர்களால், ஜெர்மனி கோல்கீப்பர் மானுவேல் நுாயரை ஏமாற்றி கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதி ஜெர்மனியின் 1–0 என்ற முன்னிலையுடன் முடிந்தது.

இரண்டாவது பாதியில் பிரான்ஸ் வீரர்கள் கோல் அடிக்க தொடர்ந்து போராடினர். இதனை தடுக்க ஜெர்மனி அணியினர் முரட்டு ஆட்டத்தை கையாண்டனர்.

தங்களது தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்த ஜெர்மனி அணிக்கு ஆன்ட்ரி ஸ்சுரல் 82வது, 88வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார்.

ஸ்டாபேஜ் நேரத்தில் பிரான்சின் பென்சிமா மின்னல் வேகத்தில் பந்தை உதைத்தார். அந்நாட்டு ரசிகர்கள் எல்லாம் அதிசயம் நடக்கும் என எதிர்பார்த்தனர். இந்த கடைசி முயற்சியையும் ஜெர்மனி கீப்பர் நுாயர் திறமையாக தடுக்க, பிரான்சின் கனவு தகர்ந்தது.

ஜெர்மனி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Brazil

 

பிரேசில்- கொலம்பியா

உலக கிண்ண காற்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொலம்பியாவை வீழ்த்திய பிரேசில் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

போர்டலெஜாவில் நடந்த காலிறுப் போட்டியில் பிரேசில் மற்றும் கொலம்பிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உலக கிண்ண தொடரை ஏற்று நடத்தி வரும் பிரேசில் அணி துவக்கம் முதல் ஆதி்க்கம் செலுத்தியது. போட்டியின் 7வது நிமிடத்தில நெய்மர் அடித்த கோனர் ஷோட்‌டை கேப்டன் தியாகோ சில்வா சிறப்பாக பயன்படுத்தி கோலாக மாற்றினார்.

இதற்கு கொலம்பிய வீரர்களால் முதல் பாதியில் பதிலடி கொடுக்கமுடியவில்லை. முதல் பாதியின் முடிவில், 1-0 என பிரேசில் முன்னிலை பெற்றது.

பின் பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியிலும் பிரேசில் வீரர்களின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசில் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை அருமையாக பயன்படு்த்திய டேவிட் லுாயிஸ் (68) இரண்டாவது கோல் அடித்தார்.

கடைசிவரை போராடிய கொலம்பிய அணிக்கு 80வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் ஒரு கோல் அடித்தார். ஆனால் தொடர்ந்து போராடிய கொலம்பிய வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

இதன்மூலம் பிரேசில் அணி 11வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. எட்டாம் திகதி பெலோ ஹரிசான்டேவில் நடக்கும் முதல் அரையிறுதியில் பிரேசில் அணி, ஜெர்மனியை சந்திக்கிறது.