வவுனியாவில் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 04 பேர் திடீரென மயங்கி விழுந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் இலங்கையின் 76வது சுதந்திர தின விழா இன்று (04.02.2024) காலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொண்டிருந்தார்.
அணிவகுப்பில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார் அணிவகுப்பு நிறைவடைந்த பின்னர் பிரதான நிகழ்வு மண்டபத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
குறித்த மாணவர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒரு மணித்தியாலமாக மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 2 மாணவர்களும் 2 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வெயிலின் தாக்கத்தினால் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
ஒவ்வொரு வருடமும் இடம்பெறுகின்ற சுதந்திர தின நிகழ்வின் போது வெப்பத்தின் தாக்கத்தினால் மாணவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மயங்கி விழுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே இனிவரும் சுதந்திர தின நிகழ்வுகளில் அணிவகுப்பு வகுப்பு முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு வெளியேற அனுமதிப்பது அல்லது மாற்று வழிகளில் செல்வது நல்லது. இவை தொடர்பில் உரிய அதிகாரிகளை கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.