கழுதைப்புலிகளுடன் போராடி கணவன் உயிரை மீட்ட பெண்!!

575

சத்தீஸ்கர் மாநிலத்தில் கணவனைத் தாக்க வந்த கழுதைப்புலி கூட்டத்தை வீரத்துடன் அவரது மனைவி எதிர்கொண்டார். அத்துடன் கழுதைப்புலி ஒன்றைக் கொன்று, கணவனை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யமனை எதிர்த்து கணவன் சத்தியவானின் உயிரை காப்பாற்றினார் சாவித்திரி என நாடு முழுவதும் ஏராளமான கதைகள் உள்ளன. பெண்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இந்த கதைகள் செவிவழிச் செய்தியாக பரப்பப்படுகின்றன.

பண்டைய தமிழ் நூல்களில் புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சி எனவும் சுட்டிக்காட்டும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அத்தகைய வீரமான சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் அடிக்கடி வனவிலங்குகள் நுழைவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

குறிப்பாக கால்நடைகளை குறிவைத்து அவ்வப்போது கழுதைப் புலிகளின் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. இவற்றை தடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கன்கேர் மாவட்டத்தின் இங்க்ரா கிராமத்தைச் சேர்ந்த நந்து ராம் யாதவ் (32), தனது மனைவி சுக்னி (28) என்பவருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு சுக்னிக்கு குழந்தை பிறந்திருந்தது.

வனப்பகுதியை ஒட்டியுள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் நந்து, சோளப்பயிரை விதைத்துள்ளார். திங்கட்கிழமை அன்று அதிகாலை தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு உரம் தெளிப்பதற்காக நந்து சென்றிருந்தார்.

வெளிச்சம் குறைவாக இருந்த சமயத்தில், திடீரென அவரை கழுதைப்புலி கூட்டம் சூழ்ந்து கொண்டு கடிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த நந்து, அலறித் துடித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சுக்னி, கணவனை மீட்பதற்காக தன்னாலான முயற்சிகளை எடுத்துள்ளார். அப்போது அவர் கையில் கனமான கட்டை ஒன்று கிடைத்ததால், அதைக் கொண்டு கழுதைப் புலிகளை விரட்ட முயற்சித்துள்ளார்.

அவர் அடித்ததில் கழுதைப்புலி ஒன்று சுருண்டு விழுந்து உயிரிழந்தது. இதையடுத்து மற்ற கழுதைப்புலிகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தன. சுக்னி மற்றும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், படுகாயமடைந்த நந்துவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

கைகள், முதுகு மற்றும் காலில் கடுமையான காயம் அடைந்திருந்த நந்துவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர் உடல்நிலை தேறியுள்ளார். இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து கழுதைப்புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நந்து மற்றும் அவரது மனைவிக்கு இழப்பீடு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தனது கணவனை காப்பதற்காக கழுதைப்புலிகளுடன் வீரத்துடன் சண்டையிட்ட சுக்னியை, நவீன சாவித்திரி என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.