ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு நேர்ந்த கதி : நீதி கோரும் பெற்றோர்!!

1336

மன்னார் பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில் பலத்த காயங்களுடன் மாணவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்டமை குறித்து குறித்த மாணவனின் பெற்றோர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மன்னார் வங்காலை கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவர் ஒருவர் கடந்த புதன்கிழமை (21.20.2024) மதியம் பாடசாலை வகுப்பறை ஒன்றிற்கு சென்றுள்ளார்.

இதன்போது இரண்டு மாணவ தலைவர்கள் மாணவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு கன்னத்தில் அறைந்து மாணவனை இழுத்துச் சென்று த கணித பாட ஆசிரியரிடம் கொடுத்து எதிர்த்து கதைப்பதாக கூறியுள்ளனர்.

கணித பாட ஆசிரியர் மாணவனிடம் எவ்வித கேள்வியும் இன்றி , தன் பங்கிற்கு இரண்டு கன்னத்திலும் கண் மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இவர்களைன் தாக்குதலாம் மாணவன் இயலாத நிலையில் வகுப்பறைக்குச் சென்றுள்ளார். பின்னர் மைதானத்திற்கு வருமாறு அறிவித்த நிலையில் மாணவன் ,தாமதித்து வந்ததாக மைதானத்தில் நின்ற ஆசிரியர் ஒருவரும் அதே கன்னத்தில் தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவன் வீடு சென்ற நிலையில் திடீர் சுகயீனமடைந்த நிலையில் அன்றைய தினம் மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கடுமையான தாக்குதலின் காரணமாக மாணவனின் ஒரு காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை மாணவனை தாக்கிய பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்படவில்லை எனவும், ஆசிரியரை காப்பாற்றும் முயற்சியில் பாடசாலை நிர்வாகம் செயல்படுவதாக சிறுவனின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த மாணவனை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி குறித்த மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.