வவுனியாவில் முதியவரை தாக்கிவிட்டு கைத்தொலைபேசி திருட்டு : பொலிசாரால் மூவர் கைது!!

2160

வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கி விட்டு கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் முதியவர் ஒருவர் வீதியால் சென்ற போது அவரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த கைத்தொலைபேசியை இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் 17 மற்றும் 38 வயதுடைய இருவர் பொலிசாரால் கைது செய்யபட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் முதியவரிடம் இருந்து பறித்துச் சென்ற கைத்தொலைபேசியை வவுனியா நகரப் பகுதியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் கொடுத்து விட்டு மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த கைத்தொலைபேசியை பெற்றுக் கொண்ட மதுபானசாலை ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட கைத்தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.