இலங்கையை வந்தடைந்த சாந்தனின் பூதவுடல் : ஞாயிறுக்கிழமை இறுதிக் கிரியை!!

1274

சென்னையில் உயிரிழந்த நிலையில் சாந்தன் உடல் இன்று காலை (01.03.2024) 11.50 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் , அவரது உடல் கொழும்பில் இருந்து தரைவழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்நிலையில் சாந்தனின் உடல் வழமையான பயணிகள் விமானத்தில் நாட்டுக்கு எடுவரப்பட்டதாவும், அவரது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் வரும் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ளதாக சாந்தனின் சகோதரர் மதிசுதா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

காலை 10.38 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் நேற்றுமுன்தினம் (28.02) காலை உயிரிழந்தார்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி மற்றும் பேரறிவாளன் , நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனைக்கு சென்று சாந்தனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தனர்.