
யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலையில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மீசாலை – அல்லாரைப் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதலில் காயமடைந்தவர்களை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுவந்த இளைஞனை சாவகச்சேரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் வைத்து மற்றொரு இளைஞர் குழுவினர் வாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞரும் மற்றும் காயமடைந்த சிலரும் அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அல்லாரையைச் சேர்ந்த எஸ்.அன்பழகன் (26) என்ற இளைஞரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழில் அண்மைக்காலமாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படும் நிலையில் மக்கள் மத்தியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.





