வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடை! கல்வி அமைச்சிற்கு பறந்த கடிதம்

330

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடை…

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தால் அவசர கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று (05) இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது தடைப்பட்டுள்ள வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை விரைந்து செயற்படுத்தவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேவைக்காலங்கள் பூர்த்தியான பின்னர், முறையாக விண்ணப்பித்து, அதனை கல்வி வலயங்களும் மாகாணமும், ஆசிரிய இடமாற்ற சபைகளும் அங்கீகரித்ததன் பின்னர் இடமாற்றம் வழங்க முடியாமல் இருப்பதற்கான காரணத்தை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு வெளிப்படுத்த வேண்டும், என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கணேசலிங்கத்தினால் கையொப்பமிடப்பட்டு கல்விச் செயலாளரிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய இடமாற்றங்களினை தாமதப்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களை உளரீதியாக வதைத்து அவர்களின் அர்ப்பணிப்பான சேவையைத் தடுத்து அதன்மூலம் மாணவர் கல்வியை அழிக்க நாம் இடமளிக்க முடியாது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆண்டு வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு தாபனவிதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளின்படி இடமாற்றம் வழங்கப்படுவது சட்டரீதியானது என்றும், அதனைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பிக்கின்றனர். அவர்களின் இடமாற்றத்தின் மூலம் ஏற்படும் வெற்றிடத்திற்கு ஆசிரியர்களைச் சமப்படுத்துவதும். தேடுவதும் திணைக்களத்தின் கடமை என அதில் சுட்டிக்கப்பட்டுள்ளது.

தவிரவும் அந்தக் கடமைகளைச் செய்ய பலர் நியமிக்கப்பட்ட்டுள்ளனர், விண்ணப்பித்த ஆசிரியர்களை விடுவிக்கும் காலம்வரை இழுத்தடித்து அவர்களுக்குப் பதிலீடாக பிழையான தரவுகளோடு ஆசிரியர்களைத் தேடியலைவது நிர்வாகச் செயற்பாட்டிற்கு முரணானது எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய துறைசார் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் இவ்வாறு நடைபெறுவதில்லை என்பதனால் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குள் இடமாற்றம் வழங்க வேண்டும். இல்லையேல் ஆசிரியர்களாகவே ஒரு முடிவினை எடுப்பதற்குச் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். எனக் கூறி அந்தக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.