கடன் பெற்றவர்களுக்கு புதிய சலுகைகள்: நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

475

கடன் பெற்றவர்களுக்கு புதிய சலுகைகள்…

வங்கிகளில் கடன் பெற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடன் பெற்றவர்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(5) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “பராட்டே சட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெற்று வியாபாரம் மேற்கொண்டுவந்த சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வியாபாரம் நட்டமடைந்துள்ளது.

எனவே, அவர்களால் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் சொத்துக்களை வங்கி உடமையாக்கி, ஏலத்தில் விடும் நிலை ஏற்பட்டுள்ளதால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பராடே சட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்த அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டாலும் தற்போதும் வங்கிகள் அந்த சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக அதிகமானவர்கள் தங்களின் தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தவணைகளை மீள செலுதத முடியாது என தெரிவித்து, கடன் மறுசீரமைப்புக்கு சென்றிருக்கிறது.

அரசாங்கத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழியில்லை என்றால், சாதாரண மக்கள் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை எவ்வாறு செல்ல முடியும்? அதனால் சாதாரண மக்களுக்கும் இந்த கடனை செலுத்துவதற்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் பொருளாதார ரீதியில் மீண்டும் குழப்ப நிலை ஏற்படும். மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருந்தோட்ட மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

ஆயிரம் ரூபா சம்பளத்தில் அவர்களால் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த முடியாது. அதனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 2ஆயிரம் ரூபாவாக ஆவது அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.