வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக் காதலன்!!

787

ஓமானில் வீட்டு வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர், அவருடன் நெருங்கிய உறவை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புத்தேகம மல்வனேகம பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய பெண் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓமானில் வீட்டு வேலை செய்யச் சென்றிருந்த நிலையில், லஹிரு மதுசங்க என்ற நபரை பேஸ்புக் ஊடாக அவர் அடையாளம் கண்டுள்ளார்.

இராணுவத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு குறித்த நபர் அந்த பெண்ணுடன் உறவை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணை அழைத்து செல்வதற்காக இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திற்குவந்துள்ளார்.

பின்னர் குறித்த நபர், குறித்த பெண்ணுடன் கொழும்புக்கு வந்து அவரது வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கண்டிக்கு அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.

இராணுவ முகாமுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி கல்கமுவ பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பானம் ஒன்றை கொடுத்து மயங்க வைத்துள்ளார்.

குறித்த பெண் மயங்கியவுடன் ஏழரை லட்சம் ரூபாய் பணம், தங்க சங்கிலி, இரண்டு வளையல்கள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பனவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண் கல்கமுவ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், கல்கமுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த ஜயசிறி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்