வவுனியா நெடுங்கேணியில் பொலிஸ் அராஜகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் : பொலிஸ் நிலையமும் முற்றுகை!!

927

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக கோரியும், பொலிசாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியா, நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று (15.03) முன்னெடுக்கப்பட்டது.

நெடுங்கேணி நகர சந்தியில் ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி, நெடுங்கேணி – புளியங்குளம் வீதி ஊடாக சென்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், உதவிப் பிரதேச செயலாளரிடம் கண்டன மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரார்கள் வனவளத் திணைககள அலுவலக வாயிலில் நின்று வனவளத் திணைக்களத்திறகு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், பின்னர் அங்கிருந்து சென்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது பொலிஸ் உயர் அதிகாரிகள் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரருடன் பேச முற்பட்ட போதும், அதற்கு மறுப்பு தெரிவித்து பொலிசாருக்கு எதிரான கோசங்களை ஆர்ப்பாட்டக்கரரர்கள் எழுப்பினர்.

இதன்போது அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதுடன், பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பொலிஸ் நிலையம் முன்பாக சுமார் அரை மணிநேரம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்கள் பின்னர் அங்கிருந்து சென்று பேரூந்து நிலையத்தில் கண்டன ஆர்பாட்டத்தை நிறைவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி எங்கள் சொத்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய், வழிபாட்டு உரிமையை தடுக்காதே, சிவ வழிபாட்டை தடை செய்யாதே,

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், பொய் வழக்கு போடாதே, பௌத்தமயமாக்கலை உடனே நிறுத்து” என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இக் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இ.சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம்,

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுருமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, து.ரவிகரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.