மட்டக்களப்பில் சுற்றுலா சென்ற மாணவர்களில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பரிதாபமாக பலி!!

288

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் உள்ள நீர்நிலையில் மூழ்கி மாணவர் ஒருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நான்கு மாணவர்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பிரதேசத்துக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம், கஜமுகா வித்தியாலயத்தினை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..

முறக்கொட்டாஞ்சேனை தேவபுரத்தில் உள்ள தனியார் வகுப்புக்கு செல்லும் ஆண்டு 9 மற்றும் 10 இல் பயிலும் 14 மாணவர்கள் மாணவி ஒருவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

குறித்த தனியார் வகுப்பு நிலையத்தின் ஆசிரியர் தலைமையில் பெற்றோரும் இணைந்ததாக இந்த சுற்றுலாவினை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளையும் பார்வையிட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள மாஸ்டர் தாண்டமடு நீர்நிலைக்கு அருகில் குறித்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது மட்டியெடுக்கவென இரு மாணவர்கள் நீரில் இறங்கியுள்ள போது அந்த மாணவர்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனைக் கண்ணுற்ற ஏனைய நான்கு மாணவர்கள் அவர்களை காப்பாற்ற நீரில் பாய்ந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களும் மூழ்குவதை கவனித்த ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விரைவாக செயற்பட்டு காப்பாற்றச் சென்ற நான்கு பேரையும் காப்பாற்றிய போதிலும் முன்னதாக மூழ்கிய இருவரும் சடலமாகவே மீட்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம், கஜமுகா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி பயிலும் செல்லத்தம்பி செல்வராணி மற்றும் தரம் 9 பயிலும் சாந்தன் பிரவின் (14) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை குறித்த இடத்துக்கு வந்த உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிய பதற்ற நிலைமையும் ஏற்பட்டது.

B1 B2 B3 B4