மர்மமாக இறந்த இளம்பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் அம்பலம்!!

560

நித்திரவிளை அருகே இளம்பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் குரல்வளை நொறுங்கியதால் கொடூரமாக உயிரிழந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் கடைசி நிமிடத்தில் சித்ரவதையை அனுபவித்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

நித்திரவிளை அருகே பூத்துறை கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் சஜின் (37). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ஷானிகா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. 2 தினங்களுக்கு முன் இரவு நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பேச்சு மூச்சு இல்லாமல் ஷானிகாவை அனுமதித்துள்ளனர் .

மருத்துவமனை ஊழியர்கள் ஷானிகாவை பரிசோதனை செய்தபோது இறந்துவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து உடலை கேட்டு தகராறு செய்ததால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நித்திரவிளை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில் ஷானிகாவின் கழுத்து நெரிக்கப்பட்டு குரல்வளை உடைந்ததால் தான் இறந்திருப்பது உறுதியானது. ஷானிகாவின் கடைசி நிமிடங்கள் மிகவும் சித்ரவதை அனுபவித்து இறந்திருக்கலாம் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே ஷானிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் அல்லது யாரேனும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்ற இரண்டு வாய்ப்பு மட்டுமே இருக்கலாம் என பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

இதையறிந்ததும் தனது மகளை கணவர் வீட்டினர் கொலை செய்துவிட்டதாக கூறி ஷானிகாவின் தந்தை தனிஸ்லாஸ் (65), நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சஜினின் வீட்டில் சென்று பார்த்தனர்.

அங்கு ஷானிகா தற்கொலை செய்ததற்கான எந்த ஆதாரமும் தென்படவில்லை. ஷானிகாவின் கணவர் சஜின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, சம்பவத்தன்று சஜினும், ஷானிகாவும் அறைக்குள் இருந்து பேசிக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் ஷானிகா மட்டும் அறையை விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர் திடீரென மயக்கம்போட்டு விழுந்துவிட்டதாக சஜின் எங்களை அழைத்தார். நாங்கள் வந்து பார்த்தபோது ஷானிகா சுயநினைவின்றி கிடந்ததை கண்டோம்.

பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மயங்கிய நிலையில் கிடந்தபோதுதான் ஷானிகாவை பார்த்தோம். எனவே அங்கு என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு தெரியாது என சஜினின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஆனால் ஷானிகாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதே அவரது கணவர் சஜின் தலைமறைவாகிவிட்டார். எனவே சஜின் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சஜினை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. சஜின் சிக்கினால்தான் உண்மையிலேயே என்ன நடந்தது என தெரியவரும்.

இதுகுறித்து ஷானிகாவின் தந்தை தனிஸ்லாஸ் போலீசிடம் அளித்துள்ள புகாரில், 2015ம் ஆண்டு எனது மகளை சஜின் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். ஆரம்பத்தில் சஜின் நன்றாக தான் இருந்தார். கடந்த 3 வருடங்களாக கஞ்சா, மது போதையில் வீட்டுக்கு வருவதும் தெரியவந்துள்ளது.

ஷானிகா மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறினர். இதனால் எனது மகள் சாவில் சஜின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகம் உள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நித்திரவிளை போலீசார் சந்தேக மரணமாகவும், அதில் சஜினின் பெயரையும் சேர்த்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.