திருவிழா கூட்டத்தில் தவறி விழுந்த குழந்தை… தேர் சக்கரம் ஏறி உயிரிழந்த சோகம்!!

933

கேரள மாநிலம், கொல்லம் அருகே சமயவிளக்கு திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 5 வயது பெண் குழந்தை தேர் சக்கரத்தில் சிக்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கரா தேவி கோயிலில் சமய விளக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் ஆண்கள், பெண்களை போன்று வேடமிட்டு விளக்குகள் ஏந்தி அம்மனை வழிபடுவர்.

சமய என்றால் ‘அலங்காரம்’ என்று பொருள். ஆண்கள், பெண்களை போல் அலங்காரம் செய்து, விளக்குகள் ஏந்தி வந்து வழிபடுவதால் இது ‘சமயவிளக்கு’ திருவிழா என அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் தேவி, தனது பக்தர்களை கண்டு, ஆசி வழங்குவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இந்த திருவிழாவில் திருநங்கைகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அம்மனை வழிபடுகின்றனர்.

நேற்று இரவு, இந்த திருவிழாவுக்கு ராமேசன் – ஜிஜி ஆகிய தம்பதியினர் தங்களது மகள் ஷேத்ராவுடன் (5) வந்திருந்தனர். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ராமேசன் கையில் இருந்த ஷேத்ரா தவறி விழுந்தார்.

அப்போது விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த தேர், குழந்தையின் மீது ஏறியது. இதில், படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆயினும் குழந்தை ஷேத்ரா பரிதாமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சவாரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பரில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஒரு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 மாணவர்கள் பலியானதுடன் 60 மாணவர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.