இலங்கை வந்த கப்பலால் அமெரிக்காவில் சுக்குநூறான முக்கிய பாலம் : 20 பேரை தேடும் மீட்புக் குழு!!

767

இரண்டாம் இணைப்பு

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த டாலி (Dali) என்ற பெயரிலான சரக்கு கப்பல் பால்டிமோர் வழியாக இலங்கைக்கு பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் பாலத்தின் ஊடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாலம் இடிந்து வீழ்ந்ததில் 20 பேர் ஆற்றில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதல் இணைப்பு

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பெல்ட்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பாரிய கப்பல் ஒன்று பாலத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலம் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளமையினால் பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அப்போது பாலத்தில் சுமார் 4 வாகனங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மீட்புக் குழுக்கள் கடுமையாக போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் பெல்ட்டிமோர் மேயர் M. Scott தெரிவித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பாலம் Patapsco ஆற்றின் குறுக்கே செல்கிறது. இது ஒரு பயங்கரமான அவசரநிலை என பெல்ட்டிமோர் தீயணைப்புத் துறையின் தகவல் தொடர்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இப்போது எங்கள் கவனம் இந்த மக்களை மீட்டு மீட்கும் முயற்சியில் உள்ளதென குறிப்பிட்டுள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என மீட்பு குழுவினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.