விஷ ஜந்துக்களை உண்பதில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்!!

806

Boy

தஞ்சை ஆலிவாய்க்கால் நத்தம் கிராமத்தில் வசிப்பவர் பிரபு ஆனந்த், வயது 24. சிறு வயதிலிருந்தே காடுகள் மீதிருந்த ஆர்வம் உயிரினங்களை உண்டு வாழும் பழக்கத்தை கற்க தூண்டியது.

தன் 15வது வயதிலிருந்தே மண் புழு, மரப்புழு, காட்டு பாம்புகள், கருவண்டு, வெள்ளை வண்டு, தேள் வகைகளை உயிரோடு உண்டு வாழும் பழக்கத்தை கொண்டுள்ளார்.

வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் தொடக்கம் முதலே பெற்றோரின் எதிர்ப்பு இருந்திருக்கிறது. ஆனாலும் பிரபு ஆனந்தின் பார்வை அனைத்தும் விஷ ஜந்துக்கள் மீதே இருந்தது.

வாரத்திற்கு இரண்டு நாட்கள் அருகில் உள்ள காடுகளுக்கு சென்று கண்ணில் படும் விஷ ஜந்துக்களை மட்டுமே உண்டு உயிர் வாழும் பழக்கத்தை தொடர்ந்தார். வெளிநாட்டினர் தான் விஷ ஜந்துக்களை உண்டு வாழ்வார்கள் என்பதை உடைக்க வேண்டும் என்பது தான் பிரபு ஆனந்தின் இலட்சியம்.

அதற்கான வேலைகளையும் சமீபத்தில் தொடங்கியிருக்கும் அவர் விரைவில் தமிழக காடுகளை வலம் வந்து அனைத்து வகை விஷ ஜந்துக்களையும் ருசிக்கப் போகிறாராம். இந்த வினோத ஆசை குறித்து அவர் குறிப்பிட்டதாவது,

சிறுவயதில் இதன் மீது இருந்த ஆர்வத்தால் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. இப்போது மரசிற்ப தொழில் செய்து வருகிறேன். ஏழை குடும்பம் தான். ஆனாலும் என் இலட்சியத்தை அடைய கடும் பயிற்சி எடுத்து வருகிறேன்.

பாம்புகளை மட்டும் தான் அப்படியே விழுங்க முடியாது என்பதால் கடித்து கொன்ற பின் உண்பேன். மற்றபடி புழுக்கள், வண்டு, தேள் ஆகியவற்றை அப்படியே விழுங்கிவிடுவேன். இதுவரை எனக்கு எந்த பாதிப்பும் வந்ததில்லை. ஒரு முறை விஷ ஜந்துக்களை உண்டுவிட்டால் அடுத்த இரு வாரத்திற்கு ஏதாவது நடக்கிறதா என்று பார்த்த பிறகு தான் அடுத்த முயற்சியை தொடங்குவேன்.

மலைப்பகுதிகளில் பயணித்து விஷ ஜந்துக்களை உண்டு வாழ ஆசைப்படுகிறேன். பின்னணி இல்லாததால் அது தாமதமாகிறது. ஆனாலும் விரைவில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் என் முயற்சிகள் இருக்கும், என்றார்.